கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கிய கடிதம் எழுதியுள்ளார். அதில், அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை, பொது நுழைவுத் தேர்வு (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாதபட்சத்தில், நீட் தேர்வின் தரவரிசை பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த முன்மொழிவு தமிழ்நாட்டிற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவக் கல்வி என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றும், இது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார். மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இது அடித்தளமாக அமைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு, 12-ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 2007-2008 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியை கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் பெரும் தடைகளை ஏற்படுத்துகின்றன என்பதை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதால், இந்த நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பதை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய நடைமுறையை கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கால்நடை மருத்துவக் கல்வியானது ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ வல்லுநர்களுக்கான தேவை, இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன.

இந்தச் சூழலில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களை தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவது தான் சரியானதாக இருக்கும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார். இத்தகைய அணுகுமுறையே நமது கூட்டாட்சி அமைப்பை மதிப்பதாகவும், கல்வித் தரத்தை தொடர்ந்து உயர்த்தவும், தகுதியான கால்நடை மருத்துவர்கள் உருவாவதை உறுதி செய்யவும் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version