தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்தி, அவர்கள் பசியின்றி பள்ளிக்கு வந்து கல்வியில் முழு கவனம் செலுத்த உதவும் வகையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த 15.06.2026 அன்று முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஆய்வுக்கூட்டத்தில், இந்த விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாகப் பயனடைவார்கள். இதற்காக நடப்பு நிதியாண்டில் 217 கோடியே 63 இலட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென மொத்தமாக 724 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 பள்ளிகளில், ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் மாநகராட்சி நிர்வாகம் காலை உணவு வழங்கும். மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 2,150 பள்ளிகளில், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் கீழ் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் உணவு வழங்கப்படும்.
ஊரகப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 பள்ளிகளில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே காலை உணவைத் தயாரித்து வழங்குவார்கள்.
இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அங்கு மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கலை முதல்வர் பரிமாறினார். மாணவர்களுடன் அமர்ந்து அவரும் உணவு அருந்தினார்.
மாணவர்களிடம் பேசிய முதல்வர், அவர்களுக்கு வேறு ஏதேனும் தேவைகள் உள்ளதா என கேட்டறிந்தார். ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவர்களை உற்சாகப்படுத்திவிட்டுச் சென்றார். இந்த உணவுத் திட்டத்தின் வாராந்திர மெனுவும் வெளியிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமைகளில் உப்புமா, செவ்வாய்க்கிழமைகளில் கிச்சடி, புதன்கிழமைகளில் பொங்கல், வியாழக்கிழமைகளில் உப்புமா, வெள்ளிக்கிழமைகளில் இனிப்பு வகை என உணவுத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் ஒரு மாணவருக்கு தினமும் 294 கிலோ கலோரி ஆற்றல், 9.85 கிராம் புரதம், 5.91 கிராம் கொழுப்பு, 1.64 மில்லிகிராம் இரும்புச் சத்து மற்றும் 20.41 மில்லிகிராம் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

