கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு த.வெ.க. சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை, த.வெ.க. தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து ஆறுதல் கூறினார். தேர்தலுக்குப் பிறகு நேரில் வந்து சந்திப்பதாக அவர் உறுதியளித்திருந்தார்.
தற்போது, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும், முதல்வர் விஜய் கரூர் செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன. இந்நிலையில், கரூர் அதிமுக எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜூலை 02 அன்று த.வெ.க.வில் இணைந்தார். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், 'வரும் ஜூலை 10ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்கிறார்' என்று அறிவித்தார். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தவும் முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
மேலும், கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாக்களிலும் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார். இந்த பயணம் கரூர் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


