கோயம்புத்தூர் மாநகருக்கு முதல்வர் விஜய் வருகை தருகிறார். பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், சிறைத்துறைக்கு சொந்தமான 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் என்ற பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானப் பணிகள் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன.
ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மொத்த மதிப்பில், கட்டுமானப் பணிகளுக்கு ரூ.245 கோடியும், புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.50 கோடியும், மின் புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த நூலக வளாகத்தில் பெரியாரின் திருவுருவச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
பெரியார் நூலக வளாகம் 'ஏ' மற்றும் 'பி' என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நூலகம், 350 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம் மற்றும் ஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேல் தளத்தில் வரவேற்பறை மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது தளத்தில், சொந்தமாக புத்தகங்கள் கொண்டு வந்து படிப்பவர்களுக்கான தனி இடம் மற்றும் சிறுவர்களுக்கான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தளத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு மற்றும் நூலகம் ஆகியவை அமைந்துள்ளன. நான்காவது தளத்தில் வரலாற்றுப் புத்தகப் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு மற்றும் நடப்பு இதழ்கள் பிரிவு ஆகியவை உள்ளன.
ஐந்தாவது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஆறாவது தளத்தில் ஆங்கிலம் கற்கும் பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர் செயல்படும். ஏழாவது தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவை அமைந்துள்ளன.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், வருகிற 16 ஆம் தேதி பெரியார் நூலகத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார். இதற்காக, அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் காந்திபுரத்தில் உள்ள பெரியார் நூலகத்திற்கு வரும் முதல்வர் விஜய், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மற்றும் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதற்காக பெரியார் நூலக வளாகத்தில் விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
