தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் நலனைப் பெருக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் சட்டசபையில் அதிரடியாக அறிவித்துள்ளார். 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' என்ற புதிய திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையிலிருந்து அமலுக்கு வரவுள்ளது.
சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்காக தனது அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கீட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தனது அரசு, பல்வேறு திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து நிறைவேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கடந்த நான்கு மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக சமையல் காஸ் சிலிண்டர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் மாற்று எரிபொருட்களை அதிக விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதால் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் முதல்வர் விஜய் சுட்டிக்காட்டினார். இந்த நிதி நெருக்கடியான சூழலையும், பொதுமக்களின் நிதிச் சுமையையும் குறைக்கும் வகையிலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கிலும், குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் இந்த 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டிற்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். இதற்கான தொகை, சிலிண்டர் பெறப்பட்டதும், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் பயனாளிகளின் பட்டியலின் அடிப்படையில், பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். அதாவது, சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும்.
இந்த இலவச சிலிண்டர் திட்டத்தால் யார் யார் பயனடைவார்கள் என்ற தகுதிகள் குறித்தும் முதல்வர் விஜய் விளக்கினார். ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு உட்பட்டு வருமானம் பெறும் குடும்பத்தினர், சிறு, குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். அதாவது, உங்கள் குடும்ப வருமானம் ஓராண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால் மட்டுமே இந்த 3 இலவச சிலிண்டர்களைப் பெற முடியும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. இது வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையிலிருந்து செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும். இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.3 கோடி குடும்பங்கள் பயனடைய உள்ளன. அரசுக்கு இதனால் கூடுதலாக 4000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். சிறு, குறு வியாபாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னை பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டு, புதிய இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும், மீனம்பாக்கம் விமான நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். வெற்றிப் பயணம் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், முதற்கட்டமாக மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் சாதாரணக் கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் இந்த விரிவாக்கம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் 6000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இல்லை என்றும், திருநர்களும் இத்திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என்றும் முதல்வர் விஜய் பேசினார்.

