முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? பண மோசடி குறித்து ஆர்பி உதயகுமார் கேள்வி

முதல்வர் விஜய் மற்றும் ஆர்பி உதயகுமார் குறித்த செய்தி

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில், 'எப்.கியூ.எல்' மற்றும் 'விஜி' செயலிகளில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்ற பொய்யான வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட மூளைச்சலவை செய்யப்பட்டு, தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்த மிகப்பெரிய மோசடியால் மதுரை மட்டுமல்லாமல், திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. இதுவரை 30,000க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் புகார் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் எத்தனை பேர் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய 'நியோ மேக்ஸ்' நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மோசடியில் இருந்து தென் தமிழக மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது புதிய ஆன்லைன் மோசடிகள் மக்களை பொருளாதார ரீதியாக மேலும் துவளச் செய்துள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில், நான்கு மாவட்டங்களில் நடந்த 'எப்.கியூ.எல்' மற்றும் 'விஜி' செயலி மோசடிகள் தென் தமிழகத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. முதலமைச்சர் கவனத்திற்கு இது நிச்சயமாக சென்றிருக்கும். ஏனெனில், மறியல், முற்றுகை போராட்டங்கள், காவல் வாகனங்கள் மீதான தாக்குதல்கள் என தென் தமிழகம் ஒரு போர்க்களமாகவே மாறியுள்ளது.

இந்த சூழலில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசாம்பட்டியைச் சேர்ந்த ராசு என்ற 26 வயது இளைஞர், அப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உரிய நீதி விசாரணை கோரியும், மோசடியில் உயிரிழந்த ராசுக்கு நீதி கேட்டும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டியதாகக் கூறப்படும் இந்த ஆன்லைன் மோசடி கும்பலால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கவும், தொடரும் உயிர் பலிகளைத் தடுக்கவும் முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் அக்கறை செலுத்துவாரா என்பதே மக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. வாக்களித்த மக்கள் இன்றைக்கு தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, நடுத்தெருவில் மோசடி கும்பலின் சூழ்ச்சி வலையில் சிக்கி சின்னாபின்னமாகி, தங்கள் எதிர்காலத்தையே இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களைப் பாதுகாக்கவும், உயிர் பலிகளைத் தடுத்து நிறுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஏறத்தாழ 10 நாட்களுக்கு மேலாக நடைபெறும் இந்த கலவரங்களுக்கு மத்தியில், தவெக அரசின் சார்பில் முறையான பாதுகாப்பு அல்லது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. பலர் தற்கொலை எண்ணத்திலும், மன உளைச்சலிலும், எதிர்காலமே சூனியம் ஆகிவிட்டதாகக் கருதி வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சாமானிய மக்களையும், ஏழை எளிய மக்களையும் இந்த மோசடியில் இருந்து காப்பாற்றவும், அவர்களின் கண்ணீரைத் துடைக்கவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமா? இழந்த பணங்களை மீட்டுத் தருமா? ஏமாற்றம் அடைந்த மக்கள் நடுவீதியில் அழுது கொண்டிருக்கின்றனர். இப்படி ஆசையைக் காட்டி மக்களை ஏமாற்றுவது சமீப காலங்களில் ஆட்சிக்கு வருவதற்கும், தற்போது நடக்கும் மோசடிகளுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.

இழந்த பணங்களை மீட்டுத் தர முதல்வர் விஜய் போர்க்கால நடவடிக்கை எடுப்பாரா? என ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மோசடிக்கு பிறகு, மீண்டும் ஒரு பெரிய ஆன்லைன் மோசடி தென் தமிழக மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்கு அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த மோசடி கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version