புகைப்பிடிப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஐடிசி நிறுவனம் தனது கோல்டு ஃப்ளேக் பிரீமியம் சிகரெட் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, 10 சிகரெட்டுகள் அடங்கிய ஒரு பாக்கெட்டின் விலை ரூ.125-ல் இருந்து ரூ.135 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பிராண்டின் சிகரெட் விலை, இந்த ஆண்டு மட்டும் சுமார் 17.4% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த ஜூன் மாதத்தில் இந்த பாக்கெட்டின் விலை ரூ.115-ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.
இந்த தொடர்ச்சியான விலை உயர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிகரெட்டுகளுக்கு 40% ஜிஎஸ்டி மற்றும் கூடுதல் கலால் வரி அமல்படுத்தப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்துள்ளன. இந்த வரிகள் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஐடிசி நிறுவனம் தயாரிக்கும் கிளாசிக் கனெக்ட் மற்றும் கோல்டு ஃப்ளேக் சூப்பர் ஸ்டார் போன்ற பிற பிராண்ட் சிகரெட்டுகளின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலைப் பட்டியலுடன் டீலர்களுக்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில், சில்லறை சந்தையிலும் இந்த புதிய விலை விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, 20 சிகரெட்டுகள் கொண்ட கிளாசிக் கனெக்ட் பாக்கெட்டின் விலை ரூ.390-ல் இருந்து 9.74% உயர்ந்து ரூ.428 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோல்டு ஃபளேகிங் சூப்பர் ஸ்டார் பிராண்டில் 10 சிகரெட்டுகள் கொண்ட பாக்கெட்டின் விலை ரூ.79-ல் இருந்து 12.66% அதிகரித்து ரூ.89 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு, மத்திய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி விகிதங்களை சீரமைத்தபோது, புகையிலை போன்ற பொருட்களுக்கான வரி அமைப்பு 4 அடுக்குகளில் இருந்து 5% மற்றும் 18% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டது. இருப்பினும், புகையிலை பொருட்கள் புதிதாக உருவாக்கப்பட்ட 40% அடுக்குக்குள் கொண்டுவரப்பட்டன.
மேலும், பிப்ரவரி 1, 2026 முதல் சிகரெட்டுகளின் நீளத்தின் அடிப்படையில் கலால் வரி விதிக்கப்பட்டது. இந்த கலால் வரி விதிப்புக்கு பிறகு சிகரெட் விலைகள் தாறுமாறாக உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொடர் விலை உயர்வுகள், சிகரெட் நுகர்வோரை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரசு விதிக்கும் வரிகள் மற்றும் நிறுவனங்களின் விலை உயர்வு கொள்கைகள் காரணமாக, புகைப்பிடிப்பவர்கள் இனி சிகரெட் வாங்குவதற்கு முன் இருமுறை யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
