நாகர்கோவில் அருகே, கள்ளக்காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறாக இருந்ததாகக் கூறி, தனது 2 குழந்தைகளையும் சிகரெட்டால் சூடு வைத்து கொடூரமாக சித்திரவதை செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பறக்கை புல்லுவிளை பகுதியைச் சேர்ந்த சுகன்யா மற்றும் அழகுவேல் தம்பதியினருக்கு 7 வயது மகனும், 6 வயது மகளும் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, சுகன்யா தனது இரு குழந்தைகளையும் ஈத்தாமொழி பகுதியில் வசிக்கும் தனது சகோதரர் ராஜலிங்கம் வீட்டில் விட்டுச் சென்றார்.
குழந்தைகளுடன் பேசித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் உடலில் தீக்காயங்கள் இருப்பதைக் கண்ட ராஜலிங்கம் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சுகன்யாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜலிங்கம், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் குழந்தைகளை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், சுகன்யாவைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சுகன்யா தனது பள்ளிப் பருவத்தில் காதலித்த ரஞ்சித்குமார் என்பவருடன், தனது கணவர் அழகுவேலுக்குத் திருமணம் ஆன பிறகும் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, ரஞ்சித்குமாரை வீட்டிற்கு அழைத்து தனிமையில் இருந்து வந்துள்ளார். இது கணவருக்குத் தெரியவந்ததும், சுகன்யா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
பின்னர், ரஞ்சித்குமாரும் சுகன்யாவும் மார்த்தாண்டம் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். குழந்தைகள் வளர்ந்து விட்டதால், தங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, அவர்களை சிகரெட்டால் சூடு வைத்தும், கம்பால் தாக்கியும் சித்திரவதை செய்துள்ளனர்.
கள்ளக்காதலனுடன் தனிமையில் இருப்பதற்கு குழந்தைகள் தடையாக இருந்ததால், அவர்களை தனது சகோதரர் வீட்டில் விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், காவல்துறையினர் சுகன்யா மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

