சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநில கல்வித்துறை புதிய கல்வியாண்டிற்காக பள்ளிகளை நேற்று திறந்தது. இதையொட்டி, பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகள் குறித்து மாநில கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, இனி பள்ளிகளில் ஒரு நாளில் மூன்று வெவ்வேறு நேரங்களில் தேசிய கீதம், தீப மந்திரம், சரஸ்வதி வந்தனம், குரு மந்திரம், சிறந்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு வாசிப்பு, உணவுக்கான பிரார்த்தனை, காயத்ரி மந்திரம் மற்றும் சாந்தி மந்திரம் ஆகியவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகளை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சத்தீஸ்கர் அரசு வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளி நேரம் முடிவடையும் போது மாணவர்கள் அனைவரும் இணைந்து காயத்ரி மந்திரம் மற்றும் சாந்தி மந்திரத்தை பாட வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் பிற மதங்களைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது, இந்து மத பிரார்த்தனைகளை கட்டாயமாக்குவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ் கொள்கையை பள்ளிகளில் திணிக்க பா.ஜ.க அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இந்த உத்தரவை மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் பள்ளிகளில் காயத்ரி மந்திரம் கட்டாயமாக்கப்பட்ட விவகாரம் தற்போது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பா.ஜ.க அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து மேலும் பல அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்புள்ளது.