தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், டிஜிட்டல் புதுமைகளுக்கும், நவீன தொழில்நுட்பங்களுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கும் நோக்கில், சென்னையில் 24 மணி நேர 'ஆரெக்ஸ் 26' ஹேக்கத்தான் போட்டி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறும் இந்த மாபெரும் தொழில்நுட்பத் திருவிழா, புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. தென்னிந்திய அளவிலான கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 60 மாணவர் அணிகள் இதில் பங்கேற்கின்றன. தமிழ் மொழியின் கற்றல், ஆராய்ச்சி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI), தமிழ் OCR, வேர்டு நெட் போன்ற 6 முக்கியப் பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கி வருகின்றனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மின் நூலகம் சார்பில் இந்த ஹேக்கத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் பதிவு செய்திருந்த நிலையில், நடுவர் குழுவின் கடுமையான பரிசீலனைக்குப் பிறகு, 60 சிறந்த அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியிலும் மூன்று மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தொடர்ச்சியாக 24 மணி நேரம் தீவிரமாகப் பணியாற்றி, குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான இயங்கும் தொழில்நுட்ப முன்மாதிரிகளை (Working Prototype) நடுவர் குழுவின் முன் சமர்ப்பிக்கின்றனர்.
இந்த ஹேக்கத்தானில் தமிழ் மொழியின் கற்றல், ஆராய்ச்சி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் தகவல்களை எளிதில் அணுகும் வசதி ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் 6 முக்கியப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை: ஒர்க்ஷாப் அண்ட் மேனேஜ்மெண்ட் போர்டல், தமிழ் OCR, வேர்டு நெட், லேர்னிங் போர்டல், ஏ.ஐ நாலேஜ் சாட்பாட், மற்றும் ஓபன் இன்னொவேஷன்.
குறிப்பாக, தமிழ் OCR பிரிவு பழமையான தமிழ் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளைத் துல்லியமாக டிஜிட்டல் மயமாக்கும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. வேர்டு நெட் பிரிவு தமிழ்ச் சொற்களின் பொருள், இலக்கணப் பயன்பாடு மற்றும் இலக்கிய ஆதாரங்களை ஆராய உதவுகிறது. ஏ.ஐ நாலேஜ் சாட்பாட், பல மொழிகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு இலக்கியச் சான்றுகளுடன் பதிலளிக்கும் செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருளாகும்.
போட்டியில் வெறும் யோசனைகளுடன் நின்றுவிடாமல், செயல்படக்கூடிய முன்மாதிரிகளை உருவாக்குவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் உருவாக்கும் சிறந்த தீர்வுகள், எதிர்காலத்தில் மேலும் மெருகேற்றப்பட்டு நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ. 25,000, இரண்டாம் பரிசு ரூ. 15,000, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 10,000 என மொத்தம் 18 அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. செயற்கை நுண்ணறிவு, இயற்கை மொழி செயலாக்கம், எண்ம நூலகங்கள் மற்றும் மொழித் தொழில்நுட்பத் துறைகளில் இளம் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், தமிழ் மொழியின் டிஜிட்டல் எதிர்காலத்தைப் பலப்படுத்தவும் இந்த 'ஆரெக்ஸ் 26' ஹேக்கத்தான் ஒரு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் இரா. சந்திரசேகரன் இந்தத் தொழில்நுட்பப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வு, தமிழ் மொழியை நவீன தொழில்நுட்பங்களுடன் இணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என நம்பப்படுகிறது.
