வந்தாரை வாழ வைக்கும் பெருமைக்குரிய மாநகரமான சென்னை, இன்று தனது 387-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாள், சென்னையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நமக்கு நினைவூட்டுகிறது.
இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், 1600-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியைத் தொடங்கினர். முதலில் மசூலிப்பட்டினத்தில் தங்கள் வணிகத்தை அமைத்த அவர்கள், பின்னர் தென் பகுதியில் ஒரு புதிய தளத்தைத் தேடினர். இதற்காக ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ் டே ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அக்காலத்தில், மதராசப் பட்டினத்தின் கிராமங்கள் வெங்கடப்பா நாயக்கர் மற்றும் அய்யப்பா நாயக்கர் சகோதரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. பிரான்சிஸ் டே, இந்த சகோதரர்களைச் சந்தித்து, தங்கள் கிழக்கிந்திய கம்பெனியைத் தொடங்க ஒரு சிறிய நிலப்பரப்பைக் கேட்டார். அதன்படி, வங்கக் கடலோரம் சுமார் 5 மைல் நீளமும், 1 மைல் அகலமுமான நிலத்தை ஆங்கிலேயர்களுக்கு சகோதரர்கள் எழுதிக் கொடுத்தனர். மேலும், இந்த நிலத்தை தங்கள் தந்தையின் பெயரான சென்னப்ப நாயக்கர் நினைவாக அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக, மதராசப் பட்டினம் சென்னப் பட்டினமாக பெயர் மாற்றம் பெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று நடைபெற்றது. எனவே, இந்த நாள் சென்னையின் பிறந்த நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
1639-ல் ஆங்கிலேயர்கள் வாங்கிய நிலத்தில், 1640-ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை கட்டும் பணி தொடங்கியது. இந்த கோட்டையைச் சுற்றி மக்கள் குடியேறத் தொடங்கினர், இது நகரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது. கோட்டைக்கான கட்டுமானப் பணிகள் 1653-ல் நிறைவடைந்தன. கோட்டையைச் சுற்றி உருவான குடியிருப்புகளில் ஆங்கிலேயர்கள் வசித்த பகுதி 'வெள்ளை நகரம்' என்றும், இந்தியர்கள் வாழ்ந்த பகுதி 'கருப்பு நகரம்' என்றும் அழைக்கப்பட்டன. பொதுவாக, கோட்டை அமைந்த பகுதி 'ஜார்ஜ் நகரம்' என்றே குறிப்பிடப்பட்டது.
ஆரம்பத்தில், கோட்டை மற்றும் ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்திய பகுதிகள் உள்ளூர் மக்களால் மதராசப் பட்டினம் என்றே அழைக்கப்பட்டன. இருப்பினும், நிலம் வழங்கிய மன்னர்களின் தந்தையின் பெயரால் சென்னப்ப நாயக்கர் நினைவாக 'சென்னப்பட்டினம்' என்ற பெயரை ஆங்கிலேயர்கள் சூட்டினர். இதனால், புதிய நகரத்தின் பெயர் மதராசப் பட்டினமா அல்லது சென்னப்பட்டினமா என்ற குழப்பம் நிலவியது. கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் இணைந்து நகரமாக உருவானபோது, வடக்கு பகுதி மதராசப் பட்டினம் என்றும், தெற்கு பகுதி சென்னப்பட்டினம் என்றும் அறியப்பட்டது. காலப்போக்கில், இந்த நகரம் முழுவதுமே 'மெட்ராஸ்' என்று அழைக்கப்படலாயிற்று. மயிலாப்பூர், சாந்தோம், சிந்தாதிரிப்பேட்டை போன்ற பகுதிகள் படிப்படியாக மெட்ராஸ் நகரத்துடன் இணைக்கப்பட்டன.
1688-ம் ஆண்டில், மெட்ராஸ் பகுதிக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் முதல் நகராட்சியாக சென்னை பெருமை பெற்றது. பின்னர், பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட நான்கு இந்திய குடியிருப்பு பகுதிகளை இணைத்து 'மெட்ராஸ் மாகாணம்' உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. ரயில் பாதைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், காவல்துறை, நீதிமன்றம், ஐகோர்ட், சென்னை பல்கலைக்கழகம், மாநில கல்லூரி, சென்ட்ரல் ரயில் நிலையம் போன்றவை அப்போது உருவாக்கப்பட்டன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1956-ல் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணம் ஒரு தனி மாநிலமாக உருவானது. பல போராட்டங்களுக்குப் பிறகு, 1969-ல் மெட்ராஸ் மாகாணம் 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் பெற்றது. அதன் தலைநகரமாக விளங்கிய மெட்ராஸ், 1996-ம் ஆண்டு 'சென்னை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்பிறகு, சென்னை நகரம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது. சென்னையின் பரப்பளவு விரிவடைந்து, சுற்றிலும் புதிய பகுதிகள் உருவாகி வேகமான வளர்ச்சியைப் பெற்றன. தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சியாக திகழும் சென்னை, பல்வேறு துறைகளிலும் முதலிடம் பெற்று சிறப்புடன் விளங்குகிறது. 2004-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் சென்னை தின விழா, ஒவ்வொரு ஆண்டும் மேலும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. வந்தாரை வாழ வைக்கும் இந்த சென்னை மாநகரின் பிறந்த நாளை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.
