தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக மத்திய புலனாய்வுத் துறையிடம் (CBI) புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 94444 42519 என்ற மொபைல் எண்ணையும், hobachchn@cbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் பொதுமக்கள் பயன்படுத்தலாம். எந்தவித அச்சமுமின்றி இந்த எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சிபிஐ அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. வங்கித் துறை தொடர்பாக 9,933 புகார்களும், ரயில்வே துறை தொடர்பாக 9,381 புகார்களும் பதிவாகி முதலிடத்தில் உள்ளன.
இதனைத் தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மீது 6,531 புகார்களும், உள்ளாட்சி அமைப்புகள் மீது 4,834 புகார்களும், நிலக்கரித் துறை பணியாளர்கள் மீது 4,118 புகார்களும், நிதித் துறை மீது 3,107 புகார்களும் பதிவாகியுள்ளன. இந்த புகார்களில் பெரும்பாலானவை பரிசீலிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் பெறப்பட்ட 70,584 புகார்களில், டிசம்பர் 31 நிலவரப்படி 64,905 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,679 புகார்கள் தற்போது விரிவான விசாரணையில் உள்ளதாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க, சிபிஐ இந்த புதிய எண்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், புகாரளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என விரும்பினால், PIDPI (Public Interest Disclosure and Protection of Informers) விதியின் கீழ் தபால் மூலம் மட்டுமே புகார் அனுப்ப வேண்டும். கடிதத்தின் மேல் உறையில் 'PIDPI' என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

