பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), மொபைல் டவர் சிக்னல் கிடைக்காத பகுதிகளின் பயன்பாட்டிற்காக, சுமார் ரூ.1.34 லட்சம் மதிப்பில் புதிய சாட்டிலைட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அதிநவீன சாட்டிலைட் போன், வழக்கமான மொபைல் டவர்களைச் சாராமல், நேரடியாக செயற்கைக்கோள்கள் வழியாக இயங்கும் திறன் கொண்டது. இதனால், மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்கள் போன்ற சிக்னல் கிடைக்காத இடங்களிலும், இதன் மூலம் மற்றவர்களுடன் வாய்ஸ் கால் மூலம் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். குறிப்பாக, பேரிடர் காலங்களில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படும்போது, இந்த போன் அவசரத் தேவைகளுக்குப் பெரிதும் உதவும்.
சர்வதேச செயற்கைக்கோள் நெட்வொர்க் நிறுவனமான இன்மார்சாட் (Inmarsat) உடன் இணைந்து பிஎஸ்என்எல் இந்த சாட்டிலைட் போனை உருவாக்கியுள்ளது. இது ரிமோட் பகுதிகளில் செயற்கைக்கோள் வாயிலாக நம்பகமான தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும்.
இந்த போனின் முக்கிய சிறப்பம்சங்களாக, நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் செயல்படும் திறன், ரிமோட் பகுதிகளில் இருந்தும் வாய்ஸ் கால் வசதி, பேரிடர் காலங்களில் அவசர உதவி கோருவதற்கான எஸ்ஓஎஸ் வசதி, நீண்ட நேரம் செயல்படும் பேட்டரி, மற்றும் கடினமான சூழல்களையும் தாங்கும் உறுதியான வடிவமைப்பு ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த சாட்டிலைட் போன் சாதாரண பொதுமக்களுக்கானது அல்ல. வழக்கமான மொபைல் நெட்வொர்க் கிடைக்காத பகுதிகளில் நம்பகமான தகவல் தொடர்பு தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் சிறப்புப் பயனர்களுக்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை, கடல்சார் நடவடிக்கைகள், பேரிடர் மீட்புப் பணிகள், சுரங்கத் தொழில், தொலைதூரத் தொழிற்சாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் யாத்ரீகர்கள் மற்றும் சாகசப் பயணங்களில் ஈடுபடுவோர் போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த போனை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் தொலைத்தொடர்புத்துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற வேண்டும் என பிஎஸ்என்எல் வலியுறுத்தியுள்ளது. அங்கீகாரம் இன்றி சாட்டிலைட் போனை இயக்குவது இந்திய சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
அனைத்து வரிகளையும் சேர்த்து, இந்த சாட்டிலைட் போனின் விலை ரூ.1,34,166 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொலைத்தொடர்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

