மேகதாது அணை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திருமாவளவன் வலியுறுத்தல்

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரிப் பிரச்சினை என்பது தமிழ்நாடு தழுவிய மற்றும் மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினை என்பதால், அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து முடிவெடுப்பது அவசியம் என்று அவர் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே, சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவின்படி, மேக்கேதாட்டு அணை கட்டுமானத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி எதுவும் அளிக்கவில்லை என்றும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு (DPR) மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் திருமாவளவன் சுட்டிக்காட்டினார். அன்றைய தலைமை நீதிபதி கவாய் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடக மாநிலத்தால் தயாரிக்கப்படும் விரிவான திட்ட அறிக்கையானது (DPR), காவிரி மேலாண்மை வாரியத்தின் (CWMA) ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே காவிரி நதிநீர் ஆணையத்தால் (CWC) பரிசீலிக்கப்படும் என்றும், இது ஒரு முன்நிபந்தனை என்றும் அவர் விளக்கினார்.

எனவே, விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் நிலையிலேயே அணை கட்ட ஒப்புதல் கிடைத்ததாக அர்த்தம் இல்லை என்றும், கர்நாடக அரசால் பூமி பூஜை நடத்த இயலாது என்றும், இது கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமாரின் ஒரு அரசியல் நாடகமே என்றும் அவர் விமர்சித்தார். திரு. டி.கே.சிவக்குமாரின் பேச்சின் அடிப்படையில் பதற்றமடைய வேண்டாம் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்திடம் நமது தரப்பு நியாயங்களை ஆதாரங்களோடு எடுத்துக்கூறி, கர்னாடக அரசு தயாரிக்கும் விரிவான திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுக்க வேண்டியதே முக்கியமான உடனடிக் கடமை என்றும் அவர் கூறினார். காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடையே ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாடு தேவை என்றும், அதை ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே சிறந்த வழி என்றும் அவர் குறிப்பிட்டு, இதை மாண்புமிகு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version