டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, உலகெங்கிலும் இருந்து வந்துள்ள பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் செய்திகளை சேகரிக்க 1,300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர்.
அவர்களுக்காக பிரத்யேகமாக சர்வதேச ஊடக மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிவேக வைபை இணைப்பு, ரஷ்யன், சீனம், அரபி, போர்த்துகீசியம், ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதி, செய்தி விளக்க அறைகள், பிரார்த்தனை கூடங்கள், உணவு மற்றும் பானங்கள் என அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பத்திரிகையாளர்களை கவரும் வகையில், வெளியுறவு அமைச்சகத்தால், பல மாநில அரசுகளுடன் இணைந்து ஒரு சிறப்பு ஊடகத் தொகுப்புப் பை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த அதிகாரப்பூர்வ ஊடகத் தொகுப்பு, இந்தியாவின் பழங்குடியினப் பாரம்பரியம், மாநிலங்களின் பன்முகத்தன்மை, விவசாயம் மற்றும் பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு புதிய முயற்சியாக அமைந்துள்ளது.
இந்த சிறப்பு பரிசு தொகுப்பில், பீகாரின் சத்துமாவு மற்றும் தாமரை விதை, ஒடிசாவின் கோராபுட் காபி, குஜராத்தின் பிளாக்-பிரிண்ட் சால்வை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பரிசு தொகுப்பு, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் செல்லும் ஒரு சிறந்த வழியாக அமைந்துள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்துள்ள பத்திரிகையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதோடு, அவர்களை கவரும் வகையிலான பரிசுகளையும் வழங்குவது, இந்தியாவின் விருந்தோம்பலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
