முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பெயர், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என அதிரடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு முன்னர் முதல்வரின் காலை உணவுத்திட்டம் என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது, தவெக அரசு இந்த பெயரை மாற்றி புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
மேலும், காலை உணவு திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு மாணவருக்கு தலா ரூ.12.71 செலவாகும் வகையில், மொத்தம் 12.87 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான உத்தேச செலவு ரூ.343.55 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான திட்ட செலவினங்களுக்காக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டின் முதலமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் பொறுப்பேற்று பொற்கால ஆட்சி நடத்தியபோது கல்வியில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் சூட்டி முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்பதோடு, பெருந்தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எங்கள் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

