டாக்கா: பார்வையற்றோருக்கான 2026 ஆண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பெரும் சர்ச்சை வெடித்தது. டாஸ் கூட போடப்படாமல் மழை காரணமாக கைவிடப்பட்ட ஆட்டத்தில், நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் மட்டும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதற்கு இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருந்தன. ஆனால், இடைவிடாது பெய்த கனமழையால் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டி ரெப்ரீயாக செயல்பட்ட பாகிஸ்தான் அதிகாரி, லீக் சுற்றின் நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணியை மட்டும் வெற்றியாளராக அறிவித்தார்.
விதிகளுக்குப் புறம்பான இந்த முடிவை எதிர்த்து, டாக்காவில் நடைபெற்ற கோப்பை வழங்கும் விழாவை இந்திய அணி புறக்கணித்து வெளியேறியது. போட்டி விதிகளை தன்னிச்சையாக மாற்றியதாக பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி சையத் சுல்தான் ஷா மீது இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டி விதிகளின் பிரிவு 27 மற்றும் விதி எண் 8.1.8.2 ஆகியவற்றின்படி, இறுதிப்போட்டி மழையால் தடைபட்டால் இரு அணிகளையும் இணை சாம்பியன்களாக அறிவிக்க வேண்டும். இந்த விதிகளுக்கு மூன்று பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவும் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது. ஆனால், திடீரென பாகிஸ்தான் அதிகாரி நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு மட்டுமே கோப்பை என முடிவை மாற்ற வைத்துள்ளார்.
இதுகுறித்து இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் மூத்த நிர்வாகி மகந்தேஷ் கூறுகையில், 'மழையால் ஆட்டம் ரத்தானால் கோப்பையை பகிர்ந்தளிப்பதுதான் சர்வதேச கிரிக்கெட் நடைமுறை. தொழில்நுட்ப குழுவும் இதற்கு முதலில் சம்மதித்தது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரி சுல்தான் ஷா உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து தீர்ப்பை மாற்ற வைத்துள்ளார். பல ஆண்டுகளாக இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து தோற்று வருகிறது. அந்த சொந்த நாட்டு மக்களின் அழுத்தத்தை சமாளிக்கவே அவர் தந்திரமாக விதியை மாற்றி கோப்பையை தட்டிப்பறித்துள்ளார். இந்த முட்டாள்தனமான முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம்' என்று கொந்தளித்தார்.
அரையிறுதியில் வங்கதேசத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, 2016 முதல் இந்த தொடரில் சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போதைய அநியாயமான முடிவால் இந்திய வீரர்கள் கடும் மனவேதனை அடைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தால் மைதானத்திலேயே இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது. இந்த விவகாரத்தை உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சிலிடம் கொண்டு செல்ல உள்ளதாகவும், பாகிஸ்தானை தனி சாம்பியனாக அறிவித்த உத்தரவை ரத்து செய்து இந்தியாவையும் இணை சாம்பியனாக அறிவிக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் திட்டவட்டமாக கூறி உள்ளது.
