குழந்தைகளின் பிறப்பை உறுதிசெய்து, அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ், அரசின் முக்கிய ஆவணமாகும். இது குழந்தையின் முதல் உரிமையாகவும் கருதப்படுகிறது. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர், பிறந்த தேதி, நேரம், இடம், மருத்துவமனை, பெற்றோர் பெயர் போன்ற முக்கிய விவரங்கள் இடம்பெறுகின்றன.
பள்ளி சேர்க்கை, ஆதார் அட்டை, வகுப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை போன்ற பல அத்தியாவசிய ஆவணங்களைப் பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் முதன்மையானதாக உள்ளது. பொதுவாக, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவசமாக பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.
சில சமயங்களில், குழந்தை பிறந்த சில நாட்களில் பெயர் வைக்கப்படாததால், பெற்றோர் குழந்தையின் பிறப்பை மட்டும் பதிவு செய்து, பெயர் இல்லாத சான்றிதழைப் பெறலாம். பின்னர், குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட்ட பிறகு, பெயரைச் சேர்த்து புதுப்பிக்கப்பட்ட சான்றிதழைப் பெற வேண்டும். அப்போதுதான் அந்தச் சான்றிதழ் முழுமையானதாக மாறும்.
இந்நிலையில், பெயர் சேர்க்காமல் உள்ளவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை வழங்கியுள்ளது. இதுகுறித்து பொது சுகாதார இயக்குநர் மற்றும் மாநில முதன்மை பிறப்பு, இறப்பு பதிவாளர் சோமசுந்தரம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 27.11.2011-க்கு முன்னர் (15 வருடங்களுக்கு முன்னர்) பிறந்து, பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பெயர் பதியப்படாமல் இருக்கும் பதிவுகளுக்கு, பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்கான இறுதி அவகாசம் 26.09.2026 வரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பிறப்புச் சான்றிதழில் உங்கள் குழந்தையின் பெயரைச் சேர்க்க செப்டம்பர் 26ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கல்விச் சான்று, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகங்கள்:
* பிறப்பு இறப்பு பதிவாளர், கிராம நிர்வாக அலுவலகம்
* பிறப்பு இறப்பு பதிவாளர், பேரூராட்சி அலுவலகம்
* பிறப்பு இறப்பு பதிவாளர், நகராட்சி அலுவலகம்
* பிறப்பு இறப்பு பதிவாளர், மாநகராட்சி அலுவலகம்
* சுகாதார ஆய்வாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்
கட்டணம் குறித்த விவரங்கள்:
பொதுவாக, குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்து, பெயர் சேர்க்காமல் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்குள் பெயரைச் சேர்க்க எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு மற்றும் 15 வருடங்களுக்குள் தாமதமாகப் பெயர் சேர்க்க ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி, தற்போது ரூ. 200 கட்டணம் செலுத்தி, பெற்றோர் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்து பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். இதுவே இறுதி வாய்ப்பு என்றும், இதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
