சின்னத்திரையின் முன்னணி பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது பத்தாவது சீசனில் ஒரு புதிய பரிமாணத்துடன் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த முறை, ‘பிக்பாஸ் காமன் மேன்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி மூலம், இதற்கு முன்னர் இல்லாத வகையில் சாதாரண மக்களுக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது சின்னத்திரை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இதுவரை பிரபலங்கள், நட்சத்திரங்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு மிக்கவர்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சியில், இனி நம்மைச் சுற்றியுள்ள சாமானியர்களும் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர். டீக்கடை பெஞ்ச் முதல் பேருந்து நிலையம் வரை நாம் காணும் அன்றாட உரையாடல்களும், பொதுவான மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும் இனி பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறும்.
‘தி காமன் மேன்’ நிகழ்ச்சி, வரவிருக்கும் பிக்பாஸ் சீசன் 10 தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்படும் ஒரு பிரத்யேக ரியாலிட்டி ஷோ ஆகும். இதன் மூலம், சாதாரண மக்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து, முதன்மை சீசனில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற போட்டியிடலாம். விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி, 21 எபிசோட்களைக் கொண்டது மற்றும் வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியை பன்முகக் கலைஞரும், பிக்பாஸ் சீசன் 7 பங்கேற்பாளருமான மாயா எஸ்.கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் வெற்றியாளர்களான ஓவியா ஹெலன், ஆரி அர்ஜுனன் மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு, போட்டியாளர்களை உன்னிப்பாகக் கவனித்துத் தேர்வு செய்கிறது. பல கட்டங்களாக நடைபெறும் கடுமையான சோதனைகள் மூலம் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
டிஜிட்டல் பதிவு மூலம் ஆயிரக்கணக்கானோர் தங்களின் சுயவிவரங்களையும், 'நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குச் செல்ல தகுதியானவர்?' என்ற வீடியோ பதிவுகளையும் vijay.jiostar.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேருக்கு, அவர்களின் பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் மன அழுத்தத்தைக் கையாளும் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் வகையில், சிறிய பேருந்தில் மணிக்கணக்கில் நிற்க வைக்கும் ‘பஸ் டாஸ்க் டிராமா’ போன்ற சவால்கள் நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து, நடுவர்கள் மூவருடன் கடுமையான வாதம் செய்யும் போட்டி நடைபெற்றது. இதில், போட்டியாளர்கள் அணியும் உடை, பேசும் விதம், ஆளுமை போன்றவற்றை மையமாக வைத்து நடுவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து, தங்கள் நிலைப்பாட்டை நிரூபிக்க வேண்டியிருந்தது. இந்தச் சோதனைகளில், நடுவர்களிடம் இருந்து பச்சை சிக்னல் பெறும் சாமானியர் நேரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார். மஞ்சள் சிக்னல் பெறுபவர் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவார், சிவப்பு சிக்னல் பெறுபவர் உடனடியாக வெளியேற்றப்படுவார்.
பிக்பாஸ் சீசன் 10-ன் புதிய வீடு, 'கார்னிவல்' தீம் அடிப்படையில் வண்ணமயமான ஒளி விளக்குகள் மற்றும் அலங்காரப் பொருட்களுடன் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. போட்டியாளர்களின் செயல்களைக் கூர்மையாகக் கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலை செய்யப்படுகிறது. மேலும், சாமானியர்களுக்கும் நட்சத்திரப் போட்டியாளர்களுக்கும் இடையிலான போட்டியைச் சுவாரஸ்யமாக்க, வீட்டில் மறைமுக அறைகள் மற்றும் தனிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சாமானியர்களின் உடல் வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தைச் சோதிக்கும் வகையில், புதிய சவால்கள் நிறைந்த திறந்தவெளி உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக் களம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரபூர்வப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சமூக வலைத்தளங்கள் மற்றும் பிக்பாஸ் வட்டாரத் தகவல்களின்படி, சின்னத்திரை பிரபலங்களான ஆர்யன், ஹேமா ராஜ்குமார், ஃபரீனா ஆசாத் மற்றும் பார்கவ் ராம் ஆகியோர் நட்சத்திரப் போட்டியாளர்களாகக் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் சாட்டையடி கேள்விகளும், சாமானியர் vs நட்சத்திர மோதலும் இந்த சீசனை மேலும் சுவாரஸ்யமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.