சென்னை: உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் பிசிசிஐ-க்கு அடுத்து முன்னணியில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஒருபுறம் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட, மறுபுறம் சீனியர் வீரர்கள் வாரியத்தின் முடிவுகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல நட்சத்திர வீரர்கள் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிரவைத்துள்ளது. அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (CA) தனது வீரர்களுக்கான புதிய வருடாந்திர ஒப்பந்தத்தை சமீபத்தில் வெளியிட்டது. ஆனால், இதில் 5 சீனியர் வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வாரியம் வழங்கிய நிபந்தனைகள் மற்றும் ஊதிய முறைகளில் உடன்பாடு இல்லாததால், அவர்கள் இதுவரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வருகின்றனர். சீனியர் வீரர்களின் இந்த பிடிவாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு புறம், கேப்டன் பாட் கம்மின்ஸை வெளிநாட்டு லீக் போட்டிகளுக்கு அனுப்பாமல், ஆஸ்திரேலிய அணிக்காக மட்டும் பிரத்யேகமாக விளையாட வைக்க வாரியம் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை தீட்டியுள்ளது. இதற்காக 3 ஆண்டுகளுக்கு அவருக்கு 12 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் பெற்று வரும் கம்மின்ஸை, ஐபிஎல் உள்ளிட்ட இதர லீக் போட்டிகளில் இருந்து தடுத்து நிறுத்த வாரியம் இந்த மிகப்பெரிய தொகையை வழங்க முன்வந்துள்ளது.
இதேவேளையில், ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக்பாஷ் டி20 லீக் தொடரை தனியார்மயமாக்கும் வாரியத்தின் திட்டத்திற்கு மாநில சங்கங்கள் முட்டுக்கட்டை போட்டுள்ளன. மொத்தம் உள்ள 6 மாநில சங்கங்களில் 3 சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. லீக் தொடரை தனியார்மயமாக்கினால் தங்களின் அதிகாரம் பறிபோய்விடும் என அவை அஞ்சுகின்றன.
இந்தத் திட்டம் தோல்வியடைந்தால் வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு கிடைக்காது. இதனால் ஆத்திரமடைந்துள்ள பல பிக்பாஷ் நட்சத்திர வீரர்கள், இனி ஆஸ்திரேலியாவில் விளையாடுவதை விட அதிக பணம் கிடைக்கும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து வாரியத்தின் தலைமை நிர்வாகி டாட் கிரீன்பெர்க் கூறுகையில், அனைத்து சங்கங்களின் ஆதரவு கிடைக்காதது வருத்தம் அளிப்பதாகவும், இந்த சூழலை எப்படி கையாள்வது என்பது குறித்து மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வீரர்களின் அதிருப்தி மற்றும் சங்கங்களின் முரண்பாட்டால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தள்ளாடி வருகிறது.