அசாமில் பொது சிவில் சட்டம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை

அசாம் மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்டுவரும் நோக்கில், பாஜக அரசு பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதை பதிவு செய்யாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

திருமணம் மற்றும் விவாகரத்து போன்றவற்றை கட்டாயம் பதிவு செய்யும் நடைமுறையும் இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை 60 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். சமூக வழக்கங்களுக்கு மாறாக தடை செய்யப்பட்ட உறவுகளுக்குள் திருமணம் செய்தால், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும், இந்த பொது சிவில் சட்டத்தின் விதிமுறைகள் மாநில பழங்குடியினருக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், 'சொத்துரிமையில் அனைவருக்கும் நியாயமான மற்றும் சம பங்களிப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பொது சிவில் சட்டம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. வாரிசுரிமைக்கான சீரான விதிகள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அசாம் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு சொத்துக்கள் நியாயமான முறையில் மாற்றப்படுவது உறுதி செய்யப்படும்' என்றார்.

உயில் எழுதாமல் இறப்பவர்களின் சொத்துரிமையானது வாரிசுகளுக்கு இடையே சீரான, பாலின சமத்துவ முன்னுரிமை வரிசையைப் பின்பற்றும். இதில் இறந்தவரின் மனைவி, கணவர், குழந்தைகள் மற்றும் பெற்றோர் அடங்குவர். உயில் வழி சொத்துரிமையைப் பொறுத்தவரை, நல்ல மனநிலையில் உள்ள எந்தவொரு முதியவரும் சாட்சிகளின் முன்னிலையில் உயிலை எழுதி வைத்து நிறைவேற்ற சட்டப்பூர்வமாக உரிமை பெற்றவராவார் என்றும் அவர் விளக்கினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version