ராமதாஸை நம்பி செலவு செய்தவர்களை நட்டாற்றில் விட்டனர் – அருள்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பாமகவின் ராமதாஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் சேலத்தில் ஆலோசனை நடத்தினர். முன்னர் இரு அணிகளாக செயல்பட்டு வந்த பாமகவில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து பாமக முன்னாள் எம்.எல்.ஏ. அருள் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அன்புமணி ராமதாஸை முன்பு கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், மீண்டும் கட்சியில் தொடர்வதா அல்லது அடுத்தக்கட்ட முடிவு என்ன என்பது குறித்து இந்த ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. அருள், 'இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு இணைந்திருந்தால், பாமகவினர் கடனாளியாக மாறி இருக்க மாட்டார்கள். ராமதாஸை நம்பி செலவு செய்தவர்களை, இப்போது நட்டாற்றில் விட்டு விட்டனர்' என்று கூறினார்.

மேலும் அவர், 'ஓராண்டுக்கு முன்னாடி இது நடந்திருந்தால், துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கும். இப்போது கடன்காரர்களாக நிற்கிறோம். பல கோடி ரூபாயை செலவு செய்தவர்களை நட்டாற்றில் விட்டுள்ளார் மருத்துவர் ராமதாஸ். எங்களின் முடிவை இரண்டு நாட்களில் அறிவிப்போம்' என்றும் தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், தங்கள் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார். இது பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version