20 கோடி முட்டைகள் சேமிப்பு: அண்ணாமலை கண்டனம்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகள் தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு முட்டைக்கு அரசு ரூ.5.63 என்ற நிலையான விலையை நிர்ணயித்துள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் முட்டை விலை ரூ.3.70 ஆக குறைந்தபோது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சேமிக்கப்பட்ட முட்டைகளை ஆண்டு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், முட்டைகள் நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்காது என்றும், குளிர்சாதன கிடங்குகளில் மாதக்கணக்கில் சேமித்து வைக்கப்பட்ட பிறகு, தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும்போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, தற்போதைய திமுக ஆட்சியிலும் இதே நிலை தொடராமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது வெறும் கொள்முதல் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, லட்சக்கணக்கான பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் பெற்றோரின் நம்பிக்கையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசு இதுகுறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version