சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் பேசிய வீ லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை, தற்போதைய த.வெ.க அரசில் லஞ்சம் மற்றும் ஊழல் மீண்டும் தலைதூக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தன்னிடம் அனைத்து ஆதாரங்களும், ஆடியோ பதிவுகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
'இந்தியாவில் டெலிவரி வேலைகளில் ஈடுபடும் 80 லட்சம் பேரில் 33 லட்சம் பேர் பட்டதாரிகள் என்றும், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 40% பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை' என்றும் அண்ணாமலை தனது உரையில் குறிப்பிட்டார். மேலும், அரசியல் மேடைகளில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் பெற்றோர்கள் குறித்து தவறாகப் பேசுவதையும், சட்டமன்றத்தில் ஒரு பெண்ணை இழிவாகச் சித்தரிப்பதையும் அவர் கண்டித்தார்.
முதல்வர் விஜய் அவர்களை நோக்கி, 'த.வெ.க அரசில் லஞ்சம், ஊழல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. உங்களிடம் உள்ள ஆடியோ ஆதாரங்களைப் போலவே உங்கள் அமைச்சர்களுக்கும் அறிவுறுத்துங்கள். ஓராண்டுக்குள் இந்தப் பிரச்சனைகளைக் கவனிக்காவிட்டால், நான் மீண்டும் இதை கிளப்புவேன். சற்று கடிவாளம் போடுங்கள், லூஸ் விடாதீர்கள்' என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசிய அண்ணாமலை, '20 லட்சம் மரக்கன்றுகளை நடும் நோக்கத்துடன் ஆகஸ்ட் மாதத்தை சுற்றுச்சூழல் மாதமாகக் கொண்டாடுகிறோம். தாமிரபரணி, வைகை, காவிரி போன்ற நதிகளைச் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை 175 கி.மீ. கடற்கரையை நான்கு வாரங்களாகச் சுத்தம் செய்து வருகிறோம்' என்று தெரிவித்தார்.
வீ லீடர்ஸ் அமைப்பு ஒரு பணியை எடுத்தால் அதை முழுமையாக முடித்துக் காட்டி, மக்கள் மாற்றத்தைக் காண வேண்டும் என்பதே நோக்கம் என்றும், இங்கு யாரும் தொண்டர்கள் அல்ல, அனைவரும் தலைவர்கள் என்ற எண்ணத்தில் செயல்படுகிறோம் என்றும் அவர் கூறினார். இந்த மாதம் மட்டும் 16 நாட்களில் தமிழகத்தில் 1,400 சுற்றுச்சூழல் நிகழ்வுகள் நடந்துள்ளன. மேலும், வீ லீடர்ஸ் அமைப்பு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியுள்ளது.
'இந்தியாவில் தொடங்கப்பட்ட எந்த அமைப்புக்கும் 73 நாட்களில் 20 லட்சம் பேர் தொண்டர்களாக உள்ளனர். நமது இலக்கு 50 லட்சத்தை எட்டுவது. ஆனால், எண்ணிக்கை முக்கியமல்ல, மாற்றத்தைக் கண்டு வருபவர்களே முக்கியம். 50 லட்சம் பேர் வந்த பிறகு, இதை அரசியலாக மாற்றி மக்களுக்கான அரசியலைக் கையில் எடுக்கப் போகிறோம். பொறுமை மிகவும் அவசியம்' என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
அடிப்படை அரசியலில் இருந்து மாற்றத்தை கொண்டுவர விரும்புவதாகவும், தலைவர்கள் டெல்லியில் அமர்ந்து தமிழகத்துக்கான முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும், ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் உள்ள பிரச்சனைகளுக்கு அங்கிருக்கும் தலைவர்களே முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டெல்லி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் போன்ற இடங்களில் அமர்ந்து முடிவெடுக்கும் காலம் மாறிவிட்டதாகக் கூறினார்.
தமிழகம் இந்திய அளவில் நிலத்தடி நீரை ஆண்டுக்கு 73% உறிஞ்சி எடுப்பதால் வறட்சி ஏற்படுகிறது என்றும், இதனால்தான் ஏரி குளங்களைச் சுத்தம் செய்வதாகவும், தமிழகத்தில் உள்ள 1 லட்சத்து 6 ஆயிரத்து 957 நீர்நிலைகளில் 50,197 நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை என்ற புள்ளிவிவரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் பேசுவது எளிதான வேலை என்றும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சியை விமர்சிப்பதும், ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை விமர்சிப்பதும் வழக்கமான அரசியல் என்றும், தான் அடிப்படை மாற்றத்துக்கான அரசியலைச் செய்ய விரும்புவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். தற்போதைய ஆட்சியில் புரட்சி நடந்துள்ளது என்றும், முதல்வர் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆகட்டும், அவர்கள் வேலையைச் செய்யட்டும். செய்யவில்லை என்றால் முதல் குற்றச்சாட்டை நாம் வைப்போம் என்றும் அவர் கூறினார்.
சிலர் தன்னை பாஜவின் பீ டீம் என்று அழைப்பதாகவும், அமித் ஷா தன்னை டெல்லிக்கு வந்து பொறுப்பேற்கச் சொன்னதாகவும், ஆனால் தான் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் செய்யும்போது கொள்கையோடுதான் செயல்பட்டுள்ளேன் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தமிழக பாஜ சார்பில் போராட்டம் நடத்தியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

