திருமணம் ஆகவிருக்கும் இளம் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, ஆதார் அட்டை இல்லாதவர்கள், முதலில் அதற்காக விண்ணப்பித்த பிறகே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். ஒருவேளை ஆதார் அட்டை கைவசம் இல்லாத பட்சத்தில், விண்ணப்பித்ததற்கான பதிவு ரசீதுடன், பான் கார்டு உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை 'அண்ணன் சீர்' என்ற பெயரில் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், இந்த திட்டத்தின் கீழ் 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை சீர் வரிசையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டச் செயலாக்கத்திற்காக தமிழக அரசு 812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மணப்பெண்ணின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இந்த வருமான வரம்பு, தேர்தல் வாக்குறுதியில் 5 லட்ச ரூபாயாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அரசாணையில் 2.5 லட்ச ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழி (Online) மூலம் மட்டுமே பெறப்படும் என்றும், இதற்கென ஒரு பிரத்யேக இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் சமூக நலத்துறையின் மூலம் தனியாக வெளியிடப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

