புட்டபர்த்தியில் பிரம்மாண்ட போர் விமான உற்பத்தி தொழிற்சாலைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர். சத்யசாய் மாவட்டத்தில் 650 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.15,803 கோடி செலவில் இந்த ஆலை அமையவுள்ளது.
இந்த தொழிற்சாலை மூலம் ஆந்திராவிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்தார். ராயலசீமா மாவட்டங்கள் இனி வறண்ட பகுதியாக இருக்காது, மாறாக பணம் கொழிக்கும் பகுதிகளாக மாறும் என்றும் அவர் கூறினார். கடப்பா இரும்பு தொழிற்சாலை பணிகள் ஜூன் மாதம் தொடங்கி 2028-க்குள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் ஆந்திரா நாட்டிற்கே ஒரு பாதுகாப்பு கவசமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தங்க உற்பத்தியிலும் ஆந்திரா புரட்சியை ஏற்படுத்தும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஜொன்னகிரி கோல்ட் ஃபீல்டில் இந்த ஆண்டு 600 கிலோ தங்கமும், அடுத்த ஆண்டு முதல் 1500 கிலோ தங்கமும் உற்பத்தி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ஆந்திராவில் கர்னூலில் 8 ட்ரோன் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். வருவாய், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ட்ரோன்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து அதிகம் இறக்குமதி செய்த இந்தியா, தற்போது அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரித்து தன்னிறைவு அடைந்துள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். 2004-ல் வெறும் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஆயுத உற்பத்தி மையங்கள் இருந்த நிலையில், தற்போது ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி மையங்கள் இருப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு சான்றாகும் என்றும் அவர் கூறினார்.