கற்றாழை, பொதுவாக மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு தாவரம். இதன் பச்சை நிற இலைகளில் முட்கள் காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகத்தை பொலிவாக்க கற்றாழை ஜெல் உதவுகிறது. சருமத்திற்கு பாதுகாப்பளிக்கும் இந்த கற்றாழை ஜெல் சாற்றின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இங்கே காணலாம்.
ஆரோக்கியமான கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும், கற்றாழை ஜெல்லை காயங்களுக்கு மேற்பூச்சாக பயன்படுத்தும்போது காயம் விரைவில் குணமாகும். இந்த ஜெல் சாற்றை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும்.
கற்றாழை ஜெல் உங்களை நாள் முழுவதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். இதில் கலோரிகள் மிகக் குறைவாகவே உள்ளன. வெறும் வயிற்றில் கற்றாழை சாற்றை தவறாமல் உட்கொள்வது பல்வேறு உடல்நலக் குறைபாடுகளில் இருந்து உங்களை விலக்கி வைக்க உதவும். மேலும், இது பல்வேறு நோய்களைத் தடுக்கவும் துணைபுரிகிறது.
கற்றாழை சாற்றில் கால்சியம், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது சருமத்திற்கு மென்மையான தன்மையை அளிப்பதோடு, முன்கூட்டியே நரை வருவதையும் தடுக்கிறது. கூந்தலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் அதிகமாக உள்ளன. செரிமானம், மலச்சிக்கல் மற்றும் வைட்டமின் குறைபாடுகள் போன்ற மருத்துவ சிக்கல்களைப் போக்கவும் கற்றாழை சாறு ஆற்றல் வாய்ந்தது.

