இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியப் பங்கு வகித்தவருமான அஜிங்கியா ரஹானே, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஹானேவின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பின் போது, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்கியுள்ளார். இதுவே தனது பயணத்தை முடித்துக் கொள்ள சரியான நேரம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் ரஹானேவின் பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, விராட் கோலி, ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடிய அவர், இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்தார். அவரது சிறப்பான ஆட்டம் பல வெற்றிகளுக்கு வழிவகுத்தது.
குறிப்பாக, 2020-2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபோது, விராட் கோலி விளையாட முடியாத நிலையில், ரஹானேவின் தலைமையில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி, அவரது தலைமைப் பண்பிற்கும், வீரர்களின் திறமைக்கும் ஒரு சான்றாக அமைந்தது.
ரஹானேவின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து, சக வீரர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். 'நாம் பல ஆண்டுகளாக ஒரே டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். நீ அடைந்துள்ள ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது என்பதை நான் அறிவேன். உனது அர்ப்பணிப்பும் தொழில்முறை அணுகுமுறையும் எப்போதும் உன்னை தனித்துக் காட்டுகின்றன. ஒரு அற்புதமான வாழ்க்கைப் பயணத்திற்காக வாழ்த்துகள். எனது மனமார்ந்த வாழ்த்துகள்!' என்று ரோஹித் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியும் ரஹானேவை தனது மிகவும் பிடித்த டெஸ்ட் பேட்டிங் பார்ட்னர் என்று பெருமையுடன் அழைத்துள்ளார். 'ஜிங்க்ஸ், ஒரு சிறந்த ஆட்டப் பயணத்திற்கு எனது வாழ்த்துகள் நண்பா. இந்திய கிரிக்கெட்டுக்காக நீ பல அற்புதங்களைச் செய்திருக்கிறாய். உனது இந்த நீண்ட பயணக்குறித்து நீ நிச்சயமாகப் பெருமைப்படலாம். ஸ்லிப் பகுதியில் மிகவும் பாதுகாப்பான கைகளைக் கொண்ட உன்னைப் போன்ற ஒருவருடன் பேட்டிங் செய்வது எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும். உனக்கு எப்போதும் நல்வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என கோலி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடிய ரஹானே, மொத்தம் 85 டெஸ்ட், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இந்த போட்டிகளில் அவர் 15 சதங்கள் மற்றும் 51 அரைசதங்கள் உட்பட மொத்தம் 8414 ரன்களைக் குவித்துள்ளார். மேலும், இந்திய அணியை 6 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய அவர், அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று, 2 போட்டிகளை டிராவாக முடித்துக் கொடுத்தார்.
ரஹானேவின் இந்த நீண்ட மற்றும் வெற்றிகரமான கிரிக்கெட் பயணத்திற்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க MDTV 24×7 வாழ்த்துகிறது.


