இரண்டு வாரங்களாக பிளவுபட்டிருந்த இலைக் கட்சி முகாம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழலில், ராஜினாமா செய்த நான்கு எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை இலைக் கட்சி தலைமை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தேர்தலுக்காக செலவழித்த தொகையை விட இரு மடங்கு பேரம் பேசி, அந்தத் தொகையை பெற்றுக்கொண்ட பின்னரே அந்த நான்கு பேரும் 'விசில்' வியூகத்தை கையாண்டதாக கூறப்படுகிறது. இந்த பேரம்பேசும் 'பரிவர்த்தனைகள்' ரெட்டி பிரமுகர் ஒருவரின் உதவியுடன் அக்கட தேசத்திலேயே நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரங்கள் அனைத்தையும் மத்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து, டெல்லிக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. கணக்கு வழக்குகள் 200 'சி' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக 'மலர்' கட்சியின் முக்கிய தலைவரிடமிருந்து விரைவில் ஒரு அதிரடி நடவடிக்கை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கொறடாவின் உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நான்கு பேரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது தவறு என்றும், அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இலைக் கட்சி தலைமை தயாராகி வருவதாக தெரிகிறது.

