2026-ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர், ரூ.9.22 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர்.
முன்னதாக, கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் முதலிடத்தில் இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு வெளியான பட்டியலில், ரூ.8.63 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியா பணக்காரர்கள் பட்டியலை, டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், மூன்றாவது இடத்தில் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி நிவாஸ் மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர், ரூ.3.39 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இடம்பிடித்துள்ளனர்.
மேலும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் சைரஸ் எஸ். பூனாவாலா 4-வது இடத்திலும், ஹெச்சிஎல் நிறுவனத்தின் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 5-வது இடத்திலும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த குமார் மங்கலம் பிர்லா 6-வது இடத்திலும், சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் திலீப் ஷாங்வி 7-வது இடத்திலும் உள்ளனர்.
இவர்கள் தவிர, விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 8-வது இடத்திலும், வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் அனில் அகர்வால் 9-வது இடத்திலும், டோரன்ட் பார்மாசூடிகல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சமீர் மேத்தா 10-வது இடத்திலும் தங்களது இடத்தைப் பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியப் பெரும் பணக்காரர்கள் மத்தியில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியல், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாகவும், பெரும் தொழிலதிபர்களின் சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
