தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் அவர்கள் வரும் 25 ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 2 ஆம் தேதி என இரண்டு நாட்கள் தாராபுரம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். மேலும், மதுராந்தகம் தொகுதியிலும் தலா இரண்டு நாட்கள் என மொத்தம் நான்கு நாட்கள் முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தாராபுரம் தொகுதியில் உடுமலை வீதியில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மதுராந்தகம் தொகுதியிலும் முதலமைச்சர் விஜய் பேசுவதற்காக பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இடைத்தேர்தலில் த.வெ.க. கட்சி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், முதலமைச்சர் விஜய்யின் பிரச்சாரம் கட்சிக்கு பெரும் பலமாக அமையும் என அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். த.வெ.க. ஆளும் கட்சியாக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் என்பதால், இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதேபோல், தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் நாளை (19ஆம் தேதி) வெளியாக உள்ளது.
வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அடுத்த வாரத்தில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அவரை காண்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரது பிரச்சாரக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தற்போது தமிழக முதலமைச்சராக அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளார். இதையொட்டி, இரண்டு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தை வரவேற்கும் விதமாக, இரு தொகுதிகளிலும் உற்சாகமான சூழல் நிலவி வருகிறது. அவரது வருகை, த.வெ.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
