மலேசியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் பாரதிதாசன், தனக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என தொடர்ந்து புகார் கூறி வந்த நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை கல்விக்கட்டணம், வாழ்க்கைச் செலவினம் மற்றும் இதர செலவுகளுக்காக வழங்கப்படுகிறது.
மாணவர் பாரதிதாசன், மலேசியாவில் உள்ள National University of Malasiya-வில் Ph.D (Tissue Engineering and Regenerative Medicine) படிப்பதற்காக 2025-2026 ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு உதவித்தொகை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாம் கல்வி ஆண்டிற்கு (2025-2026) ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கல்விக் கட்டணம் ரூ.5,01,638, விசா/விமானக் கட்டணம் ரூ.3,58,222, வாழ்க்கைச் செலவினம் ரூ.8,46,893, ஆராய்ச்சிச் செலவினம் ரூ.18,93,247 என மொத்தம் ரூ.36,00,000 வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் பல்கலைக்கழகத்திற்கும், மீதமுள்ள தொகை மாணவரின் வங்கிக் கணக்கிற்கும் நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டுக்கான வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சி செலவினங்களுக்காக மாணவர் சமர்ப்பித்த ஆவணங்களில் ரூ.8,17,962-க்கான பட்டியல்கள் ஏற்கத்தக்கதாக இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டபோதும், உரிய பதில் இதுவரை அளிக்கப்படவில்லை. இந்நிலையில், இரண்டாம் ஆண்டிற்கான (2026-2027) கல்வி உதவித்தொகையாக ரூ.12.00 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் ரூ.5.57 லட்சமும், மாணவருக்கு வாழ்க்கைச் செலவினமாக ரூ.6.65 லட்சமும் அடங்கும்.
மாணவர் பாரதிதாசன், இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 லட்சம் கோரியுள்ளார். ஆனால், அவர் சமர்ப்பித்துள்ள உத்தேச செலவினப் பட்டியல்கள் பல்கலைக்கழக பதிவாளரால் பரிந்துரைக்கப்படவில்லை. இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு, மாணவரின் ஆராய்ச்சிக்குத் தேவைப்படுகிறதா என்பதைப் பரிந்துரைத்து அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திடமிருந்து பதில் கிடைத்தவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், மாணவர் பாரதிதாசன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில், உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பதிவு செய்து, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார். இதுவரை மாணவருக்கு முதலாம் ஆண்டுக்கு ரூ.36 லட்சமும், இரண்டாம் ஆண்டுக்கு ரூ.12 லட்சமும் என மொத்தம் ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என அரசு விளக்கம் அளித்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டு உதவித்தொகை பெற்ற 181 மாணவர்களில் பாரதிதாசனைத் தவிர வேறு யாரிடமிருந்தும் புகார்கள் வரவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2026-27 ஆம் ஆண்டில் 365 மாணவர்களுக்கு உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.131 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.4750-லிருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 95,000 மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.65 கோடி கூடுதல் செலவினம் செய்யப்பட்டுள்ளது.
