இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா, தனக்குக் கிடைக்கும் அனுதாபப் பார்வைகளை மிகவும் வெறுப்பதாகத் தெரிவித்துள்ளார். திருமணம் நின்றதால் தன்னை யாரும் பாவமாகப் பார்க்க வேண்டாம் என்றும், பரிதாபம் காட்ட வேண்டாம் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
பிரபல போட்காஸ்டர் ராஜ் ஷமானி உடனான நேர்காணலில் ஸ்மிருதி மந்தனா பங்கேற்றார். அப்போது, தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சோகமான தருணங்களையும், அவற்றை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பது குறித்தும் விரிவாகப் பேசினார். உணர்ச்சிகள் அதிகமாகும்போது சில சமயங்களில் குளியலறைக்குச் சென்று அழுவதாகவும், ஆனால் அதற்காக பிறரிடம் இருந்து அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து பேசிய ஸ்மிருதி மந்தனா, 'நான் சோகமாக இருக்கும்போது நீண்ட நேரம் அமைதியாகி விடுவேன். எனக்குள் நானே ஒடுங்கிப் போய்விடுவேன். மற்றவர்களிடம் என் சோகத்தைச் சொல்லி அழுது வடிய எனக்குப் பிடிக்காது. எல்லாவற்றையும் விட எனக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று உண்டு என்றால், அது அனுதாபம் தான். எந்த வகையான அனுதாபத்தையும் நான் வெறுக்கிறேன்,' என்று அவர் கூறினார்.
'ஐயோ சோகமாக இருக்கிறாயா, என்ன நடந்தது?' என்று மக்கள் வந்து கேட்பதை என்னால் தாங்க முடியாது. நாம் ஏதோ ஒரு போட்டியில் ஆட்டமிழந்து சோகமாக இருந்தால், நாம் ஏதோ பெரிய இழப்பைச் சந்தித்துவிட்டது போல் மக்கள் ஓடி வந்து ஆறுதல் கூறுவார்கள். எனது வாழ்க்கையின் முக்கிய விதியே யாரிடமிருந்தும் எவ்வித அனுதாபத்தையும் பெறாமல் இருப்பதுதான். என்னை யாரும் பாவம் என்று பார்க்க வேண்டாம். நான் நலமாகவும், மனவலிமையோடும் இருக்கிறேன்,' என்று மந்தனா உறுதியாகத் தெரிவித்தார்.
'நான் எனது வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்துள்ளேன். இந்த அனுதாப வலைக்குள் நான் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் நேர்காணல்களில் எனது குடும்பச் சிக்கல்களைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கிறேன். மக்கள் என்னை எப்போதும் ஒரு மகிழ்ச்சியான மனிதராகப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது தனிப்பட்ட சோகக் கதையைக் கேட்டு மக்கள் ஈர்க்கப்படுவதை விட, எனது ஆட்டத்தைப் பார்த்து அவர்கள் உத்வேகம் பெற வேண்டும்,' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், கடினமான தருணங்கள் மற்றும் கடந்த கால அனுபவங்களை மனதில் தேக்கி வைக்காமல், அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதிலேயே தமக்கு நம்பிக்கை அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 30 வயதான ஸ்மிருதி மந்தனா, தற்போது உலகின் முன்னணி பேட்டராகத் திகழ்கிறார். 2025 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிய அவர், தற்போது டி20 தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
