பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் சமீபத்திய பேச்சு ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் தொகுப்பாளராக விஜய் சேதுபதி செயல்பட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே ஜனநாயகம், தலைவர் என்றால் யார் என்பது குறித்து அவர் உரையாற்றினார். போட்டியாளர்களின் வாக்குறுதிகள் குறித்தும் அவர் பேசினார்.
நேற்றைய நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி ஒரு கருத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது: 'லீடர்னா என்னன்னே தெரியாம, லீடர்ஷிப்புன்னா என்னன்னே தெரியாம, வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு, பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது, எதிரணி மேல பழியைத் தூக்கிப் போட்டுட்டு, தெறிச்சு ஓடறது லீடருக்கான குவாலிட்டி இல்ல. அதுக்குப் பேரு ஏமாத்துவேலை' என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் விஜய் சேதுபதி, நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாகக் கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, 'லீடர்னா என்னன்னே தெரியாம', 'தெறிச்சு ஓடறது' போன்ற வார்த்தைகள் நடிகர் விஜய்யை குறிவைப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதால், இது மேலும் விவாதப் பொருளகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பிளாக் பாண்டி உடல்நலக் குறைவால் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஷாத்திகா வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் விஜய் சேதுபதியின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
