பெலகாவி மாவட்டம், கங்காவதியில் உள்ள முதன்மை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பான கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறாது என்றும், இதனை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கூறி, வக்கீல் ரங்கசாமி மற்றும் பிற மனுதாரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் மனு பரிசீலனையின் போது, வக்கீல் ரங்கசாமி நீதிபதியிடம் கண்ணியமின்றி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த நீதிபதி, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், வக்கீல் ரங்கசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும், அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவில் உள்ள கடுமையான நிபந்தனைகளை திரும்பப் பெறக் கோரி, வக்கீல் ரங்கசாமி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி ஹஞ்சடே சஞ்சீவ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'சட்ட அறிவு கொண்ட ஒரு சிறந்த தலைவரால், வலிமையான மற்றும் ஆற்றல்மிக்க நாட்டை உருவாக்க முடியும். நாம் யார் என்பதையும், சமூகத்திற்கு நமது பங்களிப்பு என்ன என்பதையும் சுயபரிசோதனை செய்து கொள்ள இந்த வழக்கு ஒரு நினைவூட்டலாக அமைந்துள்ளது' என்று குறிப்பிட்டார்.
வக்கீல் ரங்கசாமி தனது தொழில் வாழ்க்கையில் எதிர்காலத்தில் தனது நடத்தையை திருத்திக் கொள்வார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். இருப்பினும், அவருக்கு ஒரு நூதன தண்டனையை விதித்து உத்தரவிட்டார். அதன்படி, அரசு மற்றும் கல்வி நிலையங்களில் 1,000 பழ மரக்கன்றுகளை நட வேண்டும். மேலும், அந்த மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சி, உரமிட்டு முறையாக பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக, பல்லாரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்திற்கு 1,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
வக்கீல் ரங்கசாமி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திரும்பப் பெறப்படாது என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார். தண்டனையில் வழங்கப்பட்ட விலக்கு என்பது குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டதாக அர்த்தமல்ல என்றும் அவர் விளக்கினார். வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த நூதன தண்டனை சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
