இந்தியாவில் மிகவும் பிரபலமான மதுபானங்களில் ஒன்றான ஓல்ட் மாங்க் ரம், உண்மையில் ரம் வகையைச் சேர்ந்தது அல்ல என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
'ஓல்ட் மாங்க்' என்ற பெயர், 'பழைய துறவி' அல்லது 'முதிர்ந்த துறவி' எனப் பொருள்படும். ரம் உற்பத்தி செய்யப்படும் மர பீப்பாய்கள் மடங்களில் வைக்கப்பட்டிருப்பதால் இந்தப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு மோகன் மீக்கின் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரம், அதன் தரம் மற்றும் சுவைக்காக மது பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம், ஓல்ட் மாங்க் ரம்மை விளம்பரப்படுத்த ஒரு பைசா கூட செலவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஓல்ட் மாங்க் ரம்மில் 42.8 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. ஆண்டுக்கு 80 லட்சத்திற்கும் அதிகமான பாட்டில்கள் விற்பனையாகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 50 நாடுகளில் இந்த ரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆய்வகத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் தயாரித்த மெக்டொவல்ஸ் நம்பர் 1 ரம், ஆன்டிகுவிட்டி ப்ளூ விஸ்கி மற்றும் ராயல் சேலஞ்ச் விஸ்கி ஆகியவற்றின் குறிப்பிட்ட வகைகளின் விற்பனைக்கும், மோகன் ராக்கி ஸ்பிரிங்வாட்டர் தயாரித்த ஓல்ட் மாங்க் ரம் வகைகளின் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி ரவீந்திர குகே மற்றும் நீதிபதி கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓல்ட் மாங்க் ரம்மை 'ரம்' என்ற பெயரில் விற்க முடியாது என்றும், அது ரம் சுவை கொண்ட ஒரு ஸ்பிரிட் என்று வேண்டுமானால் லேபிளில் குறிப்பிட்டு விற்கலாம் என்றும் FSSAI தனது தரப்பு வாதங்களை முன்வைத்தது. ஏனெனில், இது உண்மையான ரம் அல்ல என்பது சோதனையில் தெரியவந்துள்ளதாக ஆணையம் கூறியுள்ளது.
இந்தத் தகவல் மது பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓல்ட் மாங்க் ரம்மை ரம் என்று நம்பி வாங்கி அருந்தியவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
FSSAI-யின் இந்த அறிவிப்பு, மதுபானங்களின் தரம் மற்றும் பெயரிடல் தொடர்பான விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டால், சந்தையில் உள்ள பல மதுபானங்களின் உண்மைத் தன்மை வெளிச்சத்துக்கு வரக்கூடும்.
