அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குழுவினர், சீனாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணத்தை மேற்கொண்டனர். அப்போது, உளவு பார்க்கப்படுவோம் என்ற அச்சத்தால், சீன அதிகாரிகள் வழங்கிய பரிசுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் குப்பையில் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தின் போது, அதிபர் ட்ரம்ப் குழுவினர் தங்கள் செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை 'பாரடே' பைகளில் வைத்துப் பாதுகாத்தனர். இதன் மூலம், தகவல்கள் ஹேக் செய்யப்படுவதைத் தவிர்க்க அவர்கள் முயன்றனர்.
பயணத்தின் போது, ட்ரம்ப் குழுவினர் தற்காலிக போன்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை மட்டுமே பயன்படுத்தினர். சீன அதிகாரிகள், அமெரிக்க குழுவினருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள், அடையாள அட்டைகள், பேட்ஜ்கள் மற்றும் அழைப்பிதழ்களை வழங்கினர். ஆனால், சீனாவிலிருந்து புறப்படும்போது, அதிபர் ட்ரம்ப் குழுவினருக்கு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சீனா தொடர்பான எந்தப் பொருளையும் அதிபரின் விமானத்திற்குள் கொண்டு வரக்கூடாது என கடுமையாக அறிவுறுத்தப்பட்டது. இதற்காக, விமானத்தின் படிக்கட்டுகளுக்கு அருகில் ஒரு பெரிய குப்பைத் தொட்டி வைக்கப்பட்டது. சீனாவில் வழங்கப்பட்ட அனைத்து பரிசுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களையும் அதிபர் ட்ரம்ப்புடன் வந்த அமெரிக்க அதிகாரிகள் மற்றும் குழுவினர் அதில் வீசி எறிந்தனர்.
சீன நிபுணர்கள் உளவு பார்ப்பதில் கில்லாடிகள் என்ற தகவலின் அடிப்படையில், சீன அதிகாரிகள் வழங்கிய பரிசுப் பொருட்களை அமெரிக்க அதிகாரிகள் குப்பையில் வீசி எறிய உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையிலான உளவுத் தகவல்கள் குறித்த பதற்றமான சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.