சீனாவைச் சேர்ந்த 32 வயதான ஜாங் சியாவோகியாவோ என்ற இளைஞர், உடம்பில் அரிப்பு உள்ள இடங்களைச் சொரிந்து விடுவதை ஒரு முழுநேரத் தொழிலாக மாற்றி, அதன் மூலம் மாதம் சுமார் 14 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஷென்சென் நகரைச் சேர்ந்த இவர், மன அழுத்தத்தில் இருக்கும் மக்களுக்குத் தொடுதல்கள் மூலம் நிம்மதி அளிக்கும் ஒரு வணிக யோசனையைக் கண்டறிந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் கணவனின் முதுகைச் சொரிந்துவிடும் காணொளியைக் கண்ட ஜாங்கிற்கு, நவீன உலகில் மக்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்திற்கு இதுபோன்ற உடல் ரீதியான தேவைகள் பெரும் ஆறுதலைத் தரும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த யோசனையைச் செயல்படுத்தி, 'சுமா' என்ற பெயரில் ஒரு சேவையைத் தொடங்கினார். தற்போது ஷென்சென் நகரில் இரண்டு கிளைகளுடன் இயங்கும் இந்த நிறுவனம், ஒரு மணி நேர சொரிந்துவிடும் சேவைக்கு 300 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200) வசூலிக்கிறது.
இந்த விசித்திரமான சேவைக்குக் கிடைத்த எதிர்பாராத வரவேற்பால், ஜாங்கிற்கு மாத வருமானம் 1,00,000 யுவான் (சுமார் ரூ.14 லட்சம்) ஆக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் முதலில் ஒரு அமைதியான, மெல்லிய வெளிச்சம் கொண்ட அறையில் படுக்க வைக்கப்படுகின்றனர். பின்னர், பயிற்சி பெற்ற பணியாளர்கள், மனித நகங்களைப் போன்ற வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு வாடிக்கையாளர்களின் முதுகிலும் உடலின் பிற பகுதிகளிலும் மென்மையாகச் சொரிந்து விடுகின்றனர். இது வெறும் அரிப்பை நீக்குவது மட்டுமல்லாமல், நரம்புகளைத் தூண்டி, மன அழுத்தத்தைக் குறைத்து, ஆழ்ந்த நிம்மதியை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஷென்சென் நகரில் உள்ள தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், இரவு பகலாக உழைக்கும் கார்ப்பரேட் பணியாளர்கள் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் எனப் பலரும் இந்த மையத்திற்கு வருகை தருகின்றனர். 'தொடக்கத்தில் இதை மக்கள் வேடிக்கையாகப் பார்த்தனர். ஆனால், சேவையைப் பெற்ற பிறகு கிடைக்கும் மன அமைதிக்காகப் பலர் வழக்கமான வாடிக்கையாளர்களாக மாறிவிட்டனர்' என்று ஜாங் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது இரண்டு கிளைகளுடன் வெற்றிகரமாகச் செயல்படும் 'சுமா' நிறுவனத்தை, அடுத்த சில ஆண்டுகளில் சீனா முழுவதும் சுமார் 100 கிளைகளாக விரிவுபடுத்த ஜாங் திட்டமிட்டுள்ளார். 'மக்கள் எதை விசித்திரமாகப் பார்க்கிறார்களோ, அதில் இருக்கும் தேவையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் எந்தத் தொழிலிலும் சாதிக்கலாம்' என்பதற்கு ஜாங்கின் இந்த 'சொரிந்துவிடும் பிசினஸ்' ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
