சென்னையை அடுத்த பல்லாவரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி அமைப்பாளரான ஆறுமுகம், பட்டப்பகலில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகே திருநீர்மலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி அமைப்பாளராக செயல்பட்டு வந்தார். நண்பர்களுடன் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்துள்ளது.
சுமார் 10 பேர் கொண்ட இந்த கும்பல், ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட ஆறுமுகம் மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த படுகொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் பல தகவல்கள் விசாரணைக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
