டெல்டா பாசன விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு விடை கொடுக்கும் வகையில், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ளார். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்ததாலும், கர்நாடகா உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததாலும் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. இது குறுவை மற்றும் சம்பா சம்பா சாகுபடி விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.84 அடியாகவும், நீர் இருப்பு 51.33 டிஎம்சி ஆகவும் பதிவாகியுள்ளது.
சட்டசபையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஆனந்த், 'விரைவில் நல்ல செய்தி வரும்' என நம்பிக்கை அளித்திருந்தார். அமைச்சர் செங்கோட்டையன், 'இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அடுத்த 45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், காவிரி படுகையில் போதிய மழை இல்லாத நிலையிலும் பாசன தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.
இதனிடையே, மேட்டூர் அணையில் நீர் திறப்பு நடைபெற உள்ள வலது கரை பகுதிக்கு சேலம் மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, சேலம் டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமனி, மற்றும் எஸ்பி குத்தாலிங்கம் ஆகியோர் இன்று காலை வருகை தந்தனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அணை பொறியாளர்களுடன் அவர்கள் கலந்தாலோசனை நடத்தினர். இந்த அறிவிப்பு டெல்டா விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய் அவர்கள் அணையை திறந்து வைக்கும் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அணையின் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, மாநிலத்தின் விவசாய உற்பத்திக்கு பெரும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
