இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், களத்தில் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மாவை நிறத்தை வைத்து கிண்டல் செய்த விவகாரம் ஓயும் முன்பே, தற்போது ரசிகர் ஒருவருடன் அவர் மோதி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் மோசமான ஆட்டத்தை சுட்டிக்காட்டி, ரசிகர் ஒருவர் அர்ஷ்தீப் சிங்கை சமூக வலைதளத்தில் டேக் செய்து பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அர்ஷ்தீப் சிங், 'சிங் சாப்… பஞ்சாப் மாநிலத்திற்காக நீ என்ன செய்தாய்? இன்னும் சிப்ஸ் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் வாங்க அப்பா அம்மாவிடம் காசு கேட்கும் ஆட்கள் எல்லாம் எங்களுக்கு அட்வைஸ் பண்ண வந்துவிட்டீர்களா?' என காட்டமாகப் பதிலடி கொடுத்தார். இந்த உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, சக வீரர் திலக் வர்மாவைப் பார்த்து 'ஏய் அந்தேரே (இருட்டே), சன்ஸ்கிரீன் போட்டுக்கொண்டாயா?' எனக் கிண்டல் செய்ததாக அர்ஷ்தீப் சிங் மீது நிறவெறி புகார் எழுந்தது. இதற்கு முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்து, 'அர்ஷ்தீப் சிங் இந்த சீசன் முழுவதும் விளையாடத் தடை விதிக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். 1980களில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அணியின் ரகசியங்கள் கசியும் எனக்கூறி விலாக் (Vlog) செய்வதைத் தவிர்க்குமாறு பிசிசிஐ ஏற்கனவே அர்ஷ்தீப் சிங்கிற்கு அறிவுறுத்தியிருந்தது. தற்போது அடுத்தடுத்து இரண்டு சர்ச்சைகளில் அவர் சிக்கியுள்ளது, பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.