நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே, கேரளாவிற்கு கடத்த முயன்ற சுமார் 6 டன் ரேஷன் அரிசியுடன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் காலை, கோட்டைக்கருங்குளம் மெயின் ரோட்டில் வேகமாகச் சென்ற கேரள பதிவெண் கொண்ட லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஆனால், விபத்து நடந்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை காவல் ஆய்வாளர் எழில் சுரேஷ்சிங் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்போது, லாரியில் சுமார் 100 சாக்கு மூட்டைகளில் 6 டன் எடையுள்ள ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனடியாக இதுகுறித்து சிவில் சப்ளைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், லாரி மற்றும் அதில் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக சிவில் சப்ளை சி.ஐ.டி. ஆய்வாளர் முருகன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற கடத்தல்கள் தொடர்ந்தால், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.