சென்னை மதுரவாயல் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் கூலித்தொழிலாளிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். வழக்கம்போல பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், மூத்த மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
2021 ஜனவரி மாதம், 14 வயதுடைய மூத்த மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து கொடூரமான பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, சிறுமி நீண்ட நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததும், அவர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். பத்மா முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ். அனிதா, இளைஞரின் குற்றத்தை தெளிவாக நிரூபித்தார். இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
