சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டனர். திருப்புவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர் – சவுந்திர நாயகி அம்மன் கோயிலுக்கு முன்பாக ஓடும் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்வது காசிக்கு நிகரான புண்ணியமாக கருதப்படுகிறது. இதனால், தினந்தோறும் பலர் இங்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலையிலிருந்தே ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகு, பக்தர்கள் புஷ்பவனேசுவரர் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிகளுக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும், தேவஸ்தானம் சார்பில் திதிக்கு ரூ.100 மற்றும் தர்ப்பணத்திற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்ட போதிலும், தர்ப்பணம் செய்யும் பகுதியில் துணி மாற்றும் அறைகள் மற்றும் கழிவறைகள் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், வாகன நிறுத்துமிட வசதி இல்லாத காரணத்தால், வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் சென்றனர். இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாகக் கூடும் என்பதால், அந்த நாட்களில் வைகை ஆற்றுக்கு அருகிலேயே தற்காலிக வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதேபோல், ஆடி அமாவாசை வழிபாட்டிற்காக பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதுவும் பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
