தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இந்த வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள இருவரும் காவல்துறையினரின் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்றம் இருவருக்கும் முன்ஜாமின் வழங்கியதோடு, மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, செந்தில் பாலாஜி தனது 7-வது நாளாகவும், அசோக் குமார் தனது 5-வது நாளாகவும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, 'குதிரை பேரம்' வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்தார். மேலும், ஆகஸ்ட் 1 முதல் 5 ஆம் தேதி வரை கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என விசாரணை அதிகாரியிடம் மனு அளித்ததாகவும், இதுகுறித்து நீதிமன்றத்திலும் பதிவு செய்திருந்ததாகவும் தெரிவித்தார். டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சில முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த விலக்கு கோரப்பட்டதாக அவர் கூறினார். அந்த பணிகள் இரண்டு நாட்களில் முடிவடைந்ததால், மீண்டும் கையெழுத்திட வந்துவிட்டதாக அவர் விளக்கினார்.
'தலைமறைவாக சென்றுவிட்டதாக பல்வேறு செய்திகள் வந்தன. ஆனால், எனக்கு எங்கும் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. நான் சென்னையில்தான் இருந்தேன்' என செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருவதாக குறிப்பிட்டார். தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆட்சி அமைந்தவுடன் அனைத்தும் சரி செய்யப்படும் என்று கூறிவிட்டு, விவசாயிகளை நடுரோட்டில் விட்டு, போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலையை தவெக அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
'என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அதனை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன். ஏற்கனவே ஒன்றரை வருட காலம் சிறைவாசத்தை அனுபவித்து இருக்கிறேன். எனவே, பயந்து ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கு வயது 50 ஆகிறது. 30 வருடங்களாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். 20 வருடங்களுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறேன். எந்த வழக்கையும் கண்டு நான் அஞ்சப் போவதில்லை' என்று அவர் ஆணித்தரமாக கூறினார்.
மேலும், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் ஒரு கேள்வி கேட்டால், அவர் வேறு ஒரு பதிலை சொல்வார் என்றும், கேட்ட கேள்விக்கான நேரடி பதில் அவரிடம் இருந்து வராது என்றும் செந்தில் பாலாஜி விமர்சித்தார். மின் கட்டணம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், அதுகுறித்த கேள்விகளை அமைச்சர் எளிதில் கடந்து செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பிரச்சனைகள் இருக்கும்போது உரிய நடவடிக்கைகள் எடுக்காமல், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கடந்து செல்வதன் மூலம் மக்களை திசைதிருப்பும் வேலையில் அமைச்சர் ஈடுபட்டு வருவதாக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார்.
