2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. கேப்டன்சி சர்ச்சை ஒருபுறம் இருக்க, அணியின் முன்னணி விக்கெட் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசான்ஃபர், அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 வயது இளம் வீரரான அல்லா கசான்ஃபர், கடந்த 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானார். அந்த சீசனில் அவர் 11 போட்டிகளில் விளையாடி, 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பை அணியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். அவரது பந்துவீச்சில் ஓவருக்கு 10 ரன்கள் எனச் சற்று அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும், விக்கெட்டுகளை வீழ்த்துவதில் அவர் திறம்படச் செயல்பட்டார்.
தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணியில் நிலவும் கேப்டன்சி குழப்பங்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான அசாதாரண சூழ்நிலை காரணமாக கசான்ஃபர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மும்பை அணியிலிருந்து விலக அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அல்லா கசான்ஃபரை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. கடந்த சீசனில் லக்னோ அணி, சுழற்பந்து வீச்சில் திக்வேஷ் ரதியை மட்டுமே பெரிதும் நம்பியிருந்தது. அவர் 2025 சீசனில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 2026 சீசனில் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
இதனால், 14 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்த லக்னோ அணி, தனது சுழற்பந்து வீச்சை மேலும் பலப்படுத்தும் நோக்கில் கசான்ஃபரை குறிவைத்தது. லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்களுடன் நல்ல நட்பு இருப்பதால், இந்த ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டெல்லி அணியிலிருந்து குல்தீப் யாதவை வாங்கியதன் காரணமாக, கசான்ஃபர் உடனான பேச்சுவார்த்தையில் தற்போதைக்குத் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகும் முடிவில் அல்லா கசான்ஃபர் உறுதியாக இருப்பதால், அவர் அடுத்த சீசனில் வேறு ஒரு புதிய அணியில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஐபிஎல் தொடரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
