கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள சிறையில் விசாரணை கைதி சபரி வர்மன் (35) கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரி வர்மன், தனது வீட்டருகே பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்றதாக அவர் தென் தாமரை குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை 13 அன்று, சிறையில் விசாரணை கைதியாக இருந்த சபரி வர்மன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். பின்னர், அவர் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமானது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக நாகர்கோவில் சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் மற்றும் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 விசாரணை கைதிகள் என மொத்தம் 11 பேர் நேசமணி நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சிறை காவலர்கள் நாங்குநேரி கிளைச் சிறையிலும், 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். கொலை நடைபெற்ற நாகர்கோவில் சிறைச்சாலை மற்றும் சபரி வர்மனின் குடும்பத்தினரிடம் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
மேலும், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறை காவலர்கள் மற்றும் கைதிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலை நடைபெற்ற அன்று இரவு, சபரி வர்மன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என சத்தமாக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மற்ற கைதிகள் சிறை வார்டனிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த நேரத்தில், சமையல் வேலையை முடித்துவிட்டு சிறை அறைக்கு வந்திருந்த 8 கைதிகளிடம், சபரி வர்மனின் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த வார்டன்கள் அவரைத் தாக்கும்படி கூறியுள்ளனர். வார்டன்களின் தூண்டுதலால், கைதிகள் சபரி வர்மனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில், சபரி வர்மனின் லுங்கியை அவிழ்த்து, அவரது கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு தாக்கியுள்ளனர். அப்போது, சபரி வர்மன் கட்டியிருந்த லுங்கியை அவிழ்க்க முயன்றபோது, ஆத்திரமடைந்த கைதிகள் லுங்கியை கிழித்து அவரது கைகளைக் கட்டி மேலும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் நிலைதடுமாறி சபரி வர்மன் உயிரிழந்ததாக சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படும் 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் சிறை நிர்வாகத்தின் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது.
