தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களை அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை (MRP) விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின்படி, நுகர்வோரிடமிருந்து புகார் பெறப்பட்டாலோ அல்லது டாஸ்மாக் அலுவலர்களின் திடீர் ஆய்வின்போது, எம்.ஆர்.பி.யை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடையின் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முதல் முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர் ஒரு மாத காலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவார். மேலும், அவரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும். இந்த ஒரு மாத காலத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படாது. பணியிடை நீக்கம் முடிந்த பிறகு, இனி இதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என உறுதிமொழி பெற்று, தலைமையகத்தின் ஒப்புதலுடன் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்.
இரண்டாவது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால், பணியாளர் மூன்று மாத காலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவார். இந்த காலத்திலும் தொகுப்பூதியம் வழங்கப்படாது. மேலும், அபராதமும் விதிக்கப்படும். மூன்று மாத பணியிடை நீக்கம் முடிந்த பிறகு, உறுதிமொழி பெற்று, தலைமையக ஒப்புதலுடன், அவர் பணிபுரியும் கடையில் இருந்து அதே மாவட்டத்தில் உள்ள மதுபானக் கிடங்கிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, குறைந்தது மூன்று மாதங்கள் அங்கு பணியாற்ற வேண்டும்.
மூன்றாவது முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, குற்றக் குறிப்பாணை வழங்கி உள்விசாரணை நடத்தப்படும். உள்விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்படுவார்.
அபராதம் விதிக்கும் முறை குறித்தும் சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. ரூ.1 முதல் ரூ.9 வரை கூடுதலாக வசூல் செய்தால், வசூலிக்கப்பட்ட தொகைக்கு இணையாக, அதாவது ரூ.1-க்கு ரூ.1,000 வீதம் அதிகபட்சமாக ரூ.9,000 வரை அபராதம் விதிக்கப்படும். ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதலாக வசூல் செய்தால், ரூ.10,000 அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராதத் தொகையில் 60 சதவீதத்தை விற்பனை செய்த பணியாளரும், 40 சதவீதத்தை கடையில் உடன் இருந்த மேற்பார்வையாளரும் செலுத்த வேண்டும். மேற்பார்வையாளர் இல்லாத பட்சத்தில், விற்பனை செய்த பணியாளர் முழு அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும்.
இந்த கடுமையான நடவடிக்கைகள், டாஸ்மாக் கடைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், நுகர்வோர் நலனைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் இந்த புதிய விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
