மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய இணையமைச்சர் பூஷன் சவுத்ரி அளித்த விளக்கத்தைக் கேட்டு தனக்கு உறக்கமே வரவில்லை என்றும், ரத்தம் கொதிப்பதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கொந்தளிப்புடன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், மேகதாது அணை விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, மாநிலங்களவையில் எம்.பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் பூஷன் சவுத்ரி விளக்கம் அளித்திருந்தார். அந்த விளக்கத்தில், அணை கட்டுவது தொடர்பாக 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகியவற்றின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டதாக அமைச்சர் கூறியிருந்தார்.
இந்த பதிலை கேட்ட பிறகு தனக்கு உறக்கமே வரவில்லை என்றும், ரத்தம் கொதிப்பதாகவும் துரைமுருகன் வேதனையுடன் குறிப்பிட்டார். மத்திய அமைச்சருக்கு காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை கூற நிறைய பேர் இருப்பதாகவும், ஆனால் அவர் தவறான தகவலை வெளியிட்டது வருத்தத்திற்குரியது என்றும் கூறினார். 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பில், கர்நாடக அரசு முன்வைத்துள்ள மேகதாது திட்டம், தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை திட்டத்தையும் வெளிப்படையாக மீறுவதாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கர்நாடக அரசு மற்ற மாநிலங்களுக்கான நீர் விநியோகத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருந்தது.
கர்நாடகத்தில் எந்த ஆட்சி வந்தாலும், அவர்கள் காவிரி விவகாரத்தில் ஒன்றாகவே இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் இதை எதிர்க்க வேண்டும் என்றும் துரைமுருகன் வலியுறுத்தினார்.
மேலும், முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், 'முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு, பெங்களூரு போவதற்கு பதிலாக டெல்லி போகவேண்டும். மத்திய அரசுடன் ஒத்துப் போவதாக கூறுகிறார். டெல்லி சென்று பிரதமரிடம் இதுகுறித்து பேசினால் என்ன? தமிழ்நாடு இப்போது பாலைவனமாக மாறிவருகிறது' என்று விமர்சித்தார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், 'இதை விட மோசமான நிலை என்பது கிடையாது. இதற்காக தமிழர்கள் தலைகுனிய வேண்டும். இது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு கருப்பு அத்தியாயம். மத்திய அரசு இந்த நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக வேறு ஒரு பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது. இதை தற்போதைய தமிழ்நாடு அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
துரைமுருகனின் இந்த கருத்துக்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
