சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசின் பொது கட்டிடங்கள் துறை வெளியிட்டுள்ளது. இட நெருக்கடி மற்றும் நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அரசு தலைமை செயலாளர் சாய்குமார் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு முதலமைச்சரின் அலுவலகம், செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகள் மாற்றப்பட உள்ளன. இந்த இடமாற்றத்தின் காரணமாக, தற்போது 10வது தளத்தில் இயங்கி வரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் பல்வேறு பிரிவுகள், முதலமைச்சரின் சமூக ஊடகப் பிரிவு (CMO Social Media), கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சில அலுவலர்களின் அலுவலகங்கள், எழுதுப்பொருட்கள் அறைகள் ஆகியவை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் உள்ள தரைத்தளம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களுக்கு மாற்றப்படுகின்றன.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், கலைவாணர் அரங்கத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்து, அங்கு பணிபுரிய தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். மேலும், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் தற்போதுள்ள சுற்றுலா துறையின் எழுதுப்பொருட்கள் அறையும், அத்துறை அமைந்துள்ள 9வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.
இந்த இடமாற்றப் பணிகளுக்காக, கோட்டப் பொறியாளர் (கட்டடங்கள்), பொதுப்பணித்துறை, தேவையான மேஜை, நாற்காலி, சோபா, கணிணி, கோப்புகள் மற்றும் தொடர்புடைய அனைத்து பொருட்களையும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திலிருந்து சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார். உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) மற்றும் (மின்சாரம்) ஆகியோரும், இடமாற்றம் செய்யப்பட்ட அறைகளுக்கு தேவையான மின்சார மற்றும் இதர வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுத்துறையின் அலுவலக நடைமுறை-|| பிரிவு, தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு இணைய வசதி (Internet) மற்றும் தொலைபேசி வசதிகளை உடனடியாக செய்து தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் அமைந்துள்ள கூட்ட அரங்குகள் உடனடியாக பொது (கட்டடங்கள்)த்துறைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், அதில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பின் அதை பாதுகாப்பாக எடுத்துக்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றங்கள் மூலம் நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, முதலமைச்சரின் அலுவலகப் பணிகள் மேலும் திறம்பட நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
